தமிழக மக்களுக்கு தனது யோக்கியதையை முதலமைச்சர் நிரூபிக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
“அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5% இடஒதுக்கீடுக்கு ஆளுநரின் அனுமதி பெற்று – தமிழக மக்களுக்கு தனது யோக்கியதையை முதலமைச்சர் நிரூபிக்க வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .இதற்கு எதிராக, பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் , மு.க.ஸ்டாலின் உள்ஒதுக்கீடு விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றசாட்டினார். வெண்ணை திரண்டு வரும் நேரத்தில், தங்களால் தான் எல்லாம் நடந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் எண்ணத்துடன் ஆளுநருக்கு கடிதம் எழுதி, அரசியல் ஆதாயம் தேடும் செயலில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பது மக்களின் மனங்களில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாது என்பது திண்ணம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,விதையைத் தூவிவிட்டு, வியர்வை சிந்தாமல் – தண்ணீர் பாய்ச்சாமல் – ஊட்டம் தராமல் – பாதுகாப்பு செய்யாமல், அதுவாகவே முளைத்துக் கொள்ளும் என்று, பகல் கனவு கண்டு கொள்ளும் ‘போலி விவசாயியான’ முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவரது வழக்கமான, ‘ஆத்திரத்தில் பிறந்த, அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளும்; அரசியல் நாகரீகம் அற்ற அவதூறுகளும்’ பொறுப்பற்ற முறையில், போகிற போக்கில் கூறப்பட்டுள்ளன. அதில் அவரது இன்னமும் பக்குவப்படாத அரசியல் பண்பாடு வெளிப்படுகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுவது, திரு. பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் என்பதை ஏனோ மறந்துவிட்டு, நீட் தேர்வு குறித்து என்னென்னவோ சம்பந்தமில்லாதவற்றைக் கூறியிருக்கிறார். திரு. பழனிசாமி, அருகதையைப் பற்றி, தனது அறிக்கையில் அளந்து விட்டிருக்கிறார். இவர் தன்னுடைய அருகதையை – யோக்கியதையைத் தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டுமானால், நாளையே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் அனுமதியைப் பெறட்டும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.
மாணவர் நலன் காக்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து போராடுவோம் என அழைத்தால் ‘அரசியல் ஆதாயம்’ என்கிறார் @CMOTamilNadu!
அரசியல் ஆதாயம் தேடுவதாக இருந்தால் ‘அதிமுக அரசு கொண்டு வந்த மசோதாவை நிறைவேற்று’ என்று திமுக போராடுமா?
குறைந்தபட்ச பொது அறிவு கூடவா முதலமைச்சருக்கு இல்லை? pic.twitter.com/GNc3KKH2Zl
— M.K.Stalin (@mkstalin) October 23, 2020