கலைஞர் புகழை மட்டுமே முதல்வர் பாடிக்கொண்டு இருக்கிறார்- ஜெயக்குமார்.!
மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் மதுரை மாநாட்டு குழுவுடன் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது மதுரையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயர் வைத்திருக்கலாம் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் ” தமிழகத்தில் இப்போது ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் நடந்துகொண்டிருக்கிறது. அது, கருணாநிதிக்கு சிலைவைப்பதும், கருணாநிதிக்கு புகழ் பாடுவதும் தான். மதுரையில் திதாக திறக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு திருவள்ளூவர் பெயரை வைத்திருக்கலாம் அல்லது எவ்வளவோ தமிழறிஞர்கள் உள்ளார்கள் அவர்களுடைய பெயரை சூட்டியிருக்கலாம்.
கருணாநிதி நினைவிடத்திற்கு 38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைபோல், 81 கோடி ரூபாய் கடலில் நினைவுச் சின்னம் வைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படி 81 கோடியை கொண்டு கடலில் போடவேண்டுமா..? அந்த பணத்தை வைத்து எவ்வளவோ நல்ல உதவியாக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கலாம்.
கிராமங்கள் மேம்பாடு அடைய நிதி ஒதுக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் பணமில்லை கருணாநிதியின் புகழ் பாட மட்டும் பணம் இருக்கிறதா? மக்களுக்கு நல்லதை செய்யாமல் முதல்வர் கலைஞர் புகழை மட்டுமே பாடி கொண்டிருக்கிறார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.