பாஜக- அதிமுக கூட்டணி பார்த்து முதல்வர் பதற்றத்தில் இருக்கிறார்! தமிழிசை சௌந்தரராஜன் சாடல்!
அதிமுக - பாஜக கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணி என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார்.

சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து திமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். உதாரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேசியிருந்தார்கள்.
இந்த சூழலில், அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்தவர்களுக்கு அதிமுகவை சேர்ந்தவர்களும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ” முதலில் உங்களுடைய கூட்டணியில் இருக்கும் குழப்பங்கள் என்னவென்று பாருங்கள். பொருந்தாத சந்தர்ப்பவாத கூட்டணி என சிலர் சொல்கிறார்கள். நான் இந்த நேரத்தில் சொல்கிறேன் இந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி .
திமுகவை வீட்டிற்கு ஏற்றவேண்டும் என்று இணைந்த சந்தர்ப்ப கூட்டணி. திருமாவளவன் கொடியை கட்டமுடியவில்லை என்று சொல்கிறார். சாம்சங் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறார்கள். அதைப்போல ஒரு போஸ்டர் கூட ஒட்டமுடியவில்லை என காங்கிரஸ் தொண்டர்கள் அழுகிறார்கள். ஒரு துணை முதல்வர் என்கிற போஸ்டர் ஒட்டினால் கிழிக்க சொல்கிறார்கள். எனவே, உங்களுடைய கூட்டணியில் தான் இன்று குழப்பமே ஏற்பட்டுள்ளது.
மற்றபடி நாங்கள் ஏற்படுத்தக்கூடிய இந்த கூட்டணி தான் மிகவும் பலமான கூட்டணி. எங்களுடைய இந்த கூட்டணியில் இன்னும் பல பேர் சேர்வார்கள். எனவே, பலமான கூட்டணியை கொண்டு நாங்கள் 2026-ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கவிருக்கிறோம். எனவே, பதற்றம்வேண்டாம் அமைதியாக இருந்துகொள்ளுங்கள்” எனவும் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.
தொடர்ந்து திமுக குறித்து பேசிய அவர் ” தமிழக மக்களின் Out of Control ஆக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். அவர் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு பதற்றத்துடன் இருந்து வருவது எங்களுக்கு தெரிகிறது. மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு அடி பணிந்துதானே திமுக இருந்தது? ஊழலுக்கு ஒருமுறை, தேச விரோதத்திற்கு ஒருமுறை என இருமுறை கலைக்கப்பட்டது திமுக ஆட்சி தான்” எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.