இன்று மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் அறிவிப்பு !
தமிழகத்தில் சில இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (இன்று) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதேபோல், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.