10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை:தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்து வட கேரளா,தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகம் வழியாக வங்கக்கடல் வரை நிலவும் காற்றின் திசை மாறுவதால்,தமிழகத்தில் இன்று ஈரோடு,நீலகிரி,கோவை, திண்டுக்கல், தேனி திருப்பூர்,சேலம்,தருமபுரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,ராணிப்பேட்டை,வேலூர் விழுப்புரம்,திருவண்ணாமலை,கடலூர்,கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம்,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வங்கக்கடலில் மத்திய அந்தமான கடல் பகுதியில் நிலவுவதாகவும்,இதனால்,மன்னார் வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே,இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.