போலி பத்திரிகையாளர்களைக் களைய – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!
போலி பத்திரிகையாளர்களைக் களைய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள் காணாமல் போனால் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஜியான பொன்.மாணிக்கவேல் அவர்களை சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக நியமித்தது.
இதனையடுத்து,சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றியபோது முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல் அவர்கள்,தவறான அறிக்கைகளைத் தாக்கல் செய்தது குறித்து, தனிப்படை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறி, சென்னையைச் சேர்ந்த சேகர் ராம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.மேலும்,அவர் தன்னை பத்திரிகையாளர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து,உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சேகர் ராம் போலிப் பத்திரிகையாளர் என்று,பொன். மாணிக்கவேல் அவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் போலிப் பத்திரிகையாளர்களைக் கண்டுபிடிப்பது தொடர்பான, விசாரணையை உயர் நீதிமன்றம் விரிவுபடுத்தியது.
இந்நிலையில்,மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை ,நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது,”உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய “தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்” என்ற அமைப்பு 3 மாதங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மேலும்,பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை, பிரஸ் கவுன்சிலுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், சாதி, மத, மொழி அடிப்படையில் பத்திரிகையாளர் சங்கங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்த வேண்டும்.மேலும்,தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமாக மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு இலவச பஸ் பாஸ்,வீட்டு மனை, உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.மாறாக, நேரடியாக சலுகைகள் வழங்கக் கூடாது என உத்தரவிட்டனர்.
மேலும், 4 வாரங்களுக்குள் இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் கூறி விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர்.