#Breaking:அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு!
சென்னை:அதிமுக உட்கட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை,சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் தரப்பில் நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில்,ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட இரண்டு பேருக்கு மட்டுமே வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளதாகவும்,நாளை(அதாவது இன்று 7.12.21) தேர்தல் என அறிவித்துவிட்டு இன்று (6.12.21) மாலையே முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும் உறுப்பினர் ஜெயச்சந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால்,மனுவே தாக்கல் செய்யாமல் வழக்கை எப்படி விசாரிப்பது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினர்.இதற்கு பதில் அளித்த ஜெயச்சந்திரன்,தான் மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து,இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்து நாளை விசாரிப்பதாக நீதிபதி அறிவித்தனர். மேலும், குற்றச்சாட்டுகளை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய மனுதாரர் ஜெயச்சந்திரனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும், 8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,இப்பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் அதன் மீதான பரிசீலனை முடிவுற்றது.
இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக நேற்று அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என தொடரப்பட்ட இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு,அதிமுக உள்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பங்கு? என்றும், எதுவுமே இல்லாமல் தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் சேர்த்ததால் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என ஆராய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.