தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா.? முதல்வர் விளக்கம்.!
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த வியாழன் அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் கூட்டத்தில், உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை சார்ந்த மானிய கோரிக்கைகளுக்கு அந்ததந்த துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வந்தனர்.
அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி தமிழக சட்டப்பேரவையில், முன்னதாக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு நிறைவேற்றப்பட்டு இருந்த 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும், தமிழகத்தில் சாதிவாரி கனக்கடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தார்.
அதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர்,ரகுபதி, வன்னியக்கர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு என்பது போதிய தரவுகள் இல்லாத காரணத்தால் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் தரவுகள் சேகரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி உள்இடஒதுக்கீடு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தமிழக சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, இதுவரை உள்இடஒதுக்கீட்டை மாநில அரசுகளே செயல்படுத்தி உள்ளன என்றும், உள்இடஒதுக்கீட்டிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த போது அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசுதான் என்றும் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசினார்.