குட்காவை எடுத்து சென்ற வழக்கு ! இன்றும் உயர்நீதிமன்றம் விசாரணை
சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து சென்றது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது.
சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் 21 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில் ,நாட்டில் குட்கா பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும், அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வர மட்டுமே சட்டப்பேரவைக்கு எடுத்து சென்றதாகவும், அதனால் சபாநாயகரை எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து நீதிபதி ஏ. பி. சாஹி மற்றும் செந்தில் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு நேற்று மீண்டும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது.அதில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இழந்ததால் தான், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை எடுக்கப்பட்டதாக கூறுவது தவறு என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது .ஆரம்பம் முதல் தற்போது வரை அரசுபெரும்பான்மையுடன் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.