அமைச்சரவையில் செந்தில் பாலாஜி.. சட்டத்திற்கு எதிரானது.! உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை.!
அமைச்சரவையில் செந்தில் பாலாஜி இருக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. மேலும் அவர் பொறுப்பில் இருந்த இரண்டு துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை, கலால்துறை இருவேறு அமைச்சர்களிடம் பிரித்து வழங்கப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி இலாகாயில்லாத அமைச்சராக தொடர்வது ஆகியவை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி அந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு தடை விதித்தும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.