தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு!
எவ்வித காரணமும் இன்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைப்பது மக்கள் நலனுக்கு எதிரானது என ஆளுநர் பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் பற்றியும் திராவிட கொள்கைகளுக்கு எதிராக ஆளுநர் பேசி வருகிறார். தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள கோப்புகளில் கையெழுத்து இடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
எவ்வித காரணமும் இன்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைப்பது மக்கள் நலனுக்கு எதிரானது. புதுச்சேரி ஆரோவில் அறக்கட்டளை தலைவராக ஆர்என் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 செப்டம்பர் 18-ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக ஆர்என் ரவி பதவி ஏற்ற நாளில் இருந்து பிரச்னைக்குரிய நபராகவே உள்ளார்.
அவர், அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஆளுநரை மாற்ற கோரி பாஜகவை தவிர்த்து மற்ற ஆளும் கட்சியான திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக குடியரசு தலைவரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.