வேலூர் மக்களவை தேர்தல் ரத்து தொடர்பான வழக்கு : தீர்ப்பை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கில் தீர்ப்பினை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
நாளை தமிழகத்தில் 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்தது.சமீபத்தில் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.
கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கு தடையில்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சுகுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.மேலும் வாதத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு அனைத்தும் தயாராக உள்ள நிலையில் திடீரென தேர்தல் ரத்தாகியுள்ளது என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,வெற்றிபெற்ற வேட்பாளர்களை தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும் என்றும் வேலூர் தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
அதேபோல் தேர்தல் ஆணையம் வாதிடுகையில்,வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்தது ஆணையத்தின் முடிவே .நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டது.கணக்கில் வராத பணம் மட்டும் கைப்பற்றப்படுவது என்பது வேறு; அந்த பணத்துடன் வார்டு வாரியான வாக்காளர் விவரங்கள் கொண்ட ஆவணங்களும் கைப்பற்றப்படுவது என்பது வேறு.தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருந்ததால்தான் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்று வாதிட்டது.
மேலும் சுயேச்சை வேட்பாளர் சுகுமாறன் தரப்பு வாதத்தில் தேர்தல் நியாயமாக நடத்த வேண்டுமென்பதுதான் ஆணையத்தின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, ரத்து செய்வதாக இருக்க கூடாது என்று வாதம் முன் வைக்கப்பட்டது.இறுதியாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.