ஆன்லைன் சூதாட்ட தடையை எதிர்த்து வழக்கு இன்று விசாரணை.!
ஆன்லைன் சூதாட்ட தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை இன்று நடக்கிறது.
அமலுக்கு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து, 69 சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ள அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அவர்கள் முறையீடு செய்த மனு உரிய காரணத்தை கொண்டிருந்தால் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், இல்லாவிட்டால் சாதாரண வழக்காக வழக்கமான பட்டியலில் இடம் பெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தொடரப்பட்ட வழக்கை காணொளி வாயிலாக நீதிபதிகள் இன்று விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்:
ஆன்லைன் சூதாட்டத்தால் தங்கள் பணத்தை இழந்து பலர் பெரும் கடனாளியாக மாறி மனஉளைச்சலில் பல்வேறு நபர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் . இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியது.
2 முறை நிறைவேற்றி, இரண்டவது முறை தான் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு இம்மாதம் 10ஆம் தேதி தமிழக ஆளுநர் ரவி கையெழுத்திட்டார். ஆளுநர் கையெழுத்திட்ட உடன் உடனடியாக தமிழக அரசிதழில் இந்த சட்டம் வெளியிடப்பட்டு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.