21 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு – ஓபிஎஸ் கடும் கண்டனம்!

Default Image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடித்துள்ளதற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படவிருக்கும் சூழ்நிலையில்,கடந்த ஜன.31 ஆம் தேதியன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பன்னிரெண்டு தமிழ்நாட்டு மீனவர்களையும்,விசைப்படகையும் இலங்கை மீனவர்கள் சுற்றிவளைத்து தகராறு செய்ததாகவும்,இதற்கிடையே அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 12 பேரையும், விசைப்படகையும் சிறைபிடித்து மயிலட்டி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இதேபோன்று,புதுச்சேரியைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும் அவர்கள் வந்த விசைப்படகினையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.இலங்கை கடற்படையினரின் மேற்படி செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது.

இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தாலும்,தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும்,சிறை பிடிக்கப் படுவதும்,படகுகள் கைப்பற்றப்படுவதும் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு,அவர்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு விடுமோ என்ற மிகப் பெரிய கவலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுகுறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து,தேவையான அழுத்தத்தை அளித்து,இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும்,இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்