நிற்காமல் சென்ற பேருந்து…ஓடிய மாணவி! ஓட்டுநர் அதிரடி சஸ்பெண்ட்!
பேருந்தை பின் தொடர்ந்து பள்ளி மாணவி ஓடிய நிலையில் கண்டங்கள் எழுந்த காரணத்தால் உடனடியாக ஓட்டுநர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் : மாவட்டம், வாணியம்பாடி அருகே கொத்தகோட்டையில் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை அரசு பேருந்து ஓட்டுநர் ஏற்றாமல் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருந்தது. இன்று காலை 12 படிக்கும் அந்த மாணவி தேர்வு எழுதுவதற்காக பள்ளி செல்ல பேருந்துக்காக காத்திருந்தார். அந்த பகுதியில் பொது போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு என்பதால், அவர் அரசு பேருந்தை மட்டுமே நம்பியிருந்தார்.
அந்த நேரத்தில் பேருந்து வரும் நேரத்தில் அவர் நின்றுகொண்டிருந்த போதிலும் அரசு பேருந்தின் ஓட்டுநர் முனிராஜ், மாணவி காத்திருந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். உடனடியாக அந்த மாணவியும் இந்த பேருந்தை விட்டால் நம்மால் தேர்வு எழுத முடியாது என்கிற அச்சத்தில் வேகமாக பேருந்தை நோக்கி பின் தொடர்ந்து ஓட தொடங்கினார். கத்திகொண்டே மாணவி ஓடிய நிலையில் பாதி தூரத்தில் சென்று தான் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், உடனடியாக கண்டனங்களும் எழுந்தது. உடனடியாக பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி வந்தனர். இதனையடுத்து, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று சென்னை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாத அரசு பேருந்து ஓட்டுநர் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு அளித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. ஓட்டுநர் முனிராஜ் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன், என்ன காரணத்துக்காக நிறுத்தாமல் பேருந்தை ஓட்டுநர் எடுத்து சென்றார் என்கிற விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.