பயணிகளை காப்பாற்றி பரிதாபமாக உயிரிழந்த பேருந்து ஓட்டுநர்! நீலகிரியில் பெரும் சோகம்…
நீலகிரி :பயணிகளை காப்பாற்றி விட்டு தன் உயிரை காப்பாற்ற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு தமிழக அரசால் ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 43). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், இன்று காலை 6 மணி அளவில் கூட்டாடாவிலிருந்து கோத்தகிரி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். பேருந்து கோத்தகிரியை நெருங்கும்போது, சாலை ஓரம் மின் கம்பி ஒன்று அறுந்து தொங்கியவாறு கிடந்துள்ளது. எதிர்பாராத விதமாக அந்த கம்பி பேருந்தின் மீது உரசி சத்தம் கேட்டதுடன், தீ பொரி பறந்துள்ளது.
இதை சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பிரதாப், பேருந்தை பொருமையாக நிறுத்திவிட்டு பயணிகள் மற்றும் நடத்துநரை அதில் இருந்து இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதை கேட்ட பயணிகள் மற்றும் நடத்துநர் ஆகிய அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே இறங்கி ஓடியுள்ளனர். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து இறங்க பிரதாப் முயற்சி செய்துள்ளார்.
ஆனால் கண் இமைக்கும் நொடியில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை அடுத்து பிரதாப் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீஸார் பிரதாப்பின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உடனடியாக அந்த மின் கம்பி இருந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பராமரிப்பு பணிகளுக்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதாப்பின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்ததுடன் ரூ.3 லட்சம் நிதி உதவியும் அறிவித்துள்ளார்.