தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் – ஜே.பி.நட்டாவுக்கு ஸ்டாலின் பதிலடி
தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் என்று ஜே.பி.நட்டாவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜக மாநில செயற்குழுவில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பொதுச்செயலாளர் முரளிதரராவ் பங்கேற்று உரையாற்றினர். அப்போது, ஜெ.பி.நட்டா கூறுகையில், நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது என்றும் தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக திமுக உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆட்சியதிகார ஆணவத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜனநாயகத்தை சிறைப்படுத்தி வரும் பாஜக, தமிழ்ப் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக பா.ஜ.க.,வின் செயற்குழுக் கூட்டத்தை காணொலி வாயிலாக நடத்திய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள், தங்கள் சொந்தக் கட்சிக்கான ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்குவதை விடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தேவையின்றி சீண்டியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு முன்பு, தமிழக பா.ஜ.க.,வின் நிர்வாகக் கூட்டத்தில் பேசிய திரு.முரளிதர் ராவ் அவர்களும் தி.மு.க.,வை விமர்சித்துப் பேசியதுடன், ஜனநாயக மாண்புகளுக்குப் புறம்பாக, “மு.க.ஸ்டாலினை முதல்வராக விடமாட்டோம்” எனத் தனிப்பட்ட முறையில் என்னைக் குறி வைத்துப் பேசியதையும் இங்கே நினைவூட்டிட விரும்புகிறேன். தி.மு.க. என்பது ஜனநாயக இயக்கம். வளர்ச்சியிலும், தேச உணர்வுகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, பாடுபட்டுவரும் இயக்கம். ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாத்து, மக்களின் அடிப்படை சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே எமர்ஜென்சியை எதிர்த்து நின்று ஆட்சியையே விலையாகக் கொடுத்த இயக்கம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“ஆட்சியதிகார ஆணவத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜனநாயகத்தை சிறைப்படுத்தி வரும் பாஜக – தமிழ்ப் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி”
– கழக தலைவர் @mkstalin அவர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கண்டனம்.
Link: https://t.co/h8Ddfhsrwp#DMK #MKStalin pic.twitter.com/tQolAkOXpg
— DMK (@arivalayam) August 24, 2020