“பாஜக-ஊபா என்னும் கொடிய சட்டம்;இந்த நிலையில் ஜெய்பீம்”- நடிகர் சூர்யாவுக்கு விசிக தலைவர் பாராட்டு!

Default Image

தமிழகம்:சாதி-மத சீரழிவுப் போக்குகளைச் சில அரசியல் சக்திகள் ஊக்குவித்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக இருந்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற திரைக் கலைஞர் ஒருவர் தனக்குள்ள புகழையும் செல்வாக்கையும் எவ்வாறு எளிய மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு நடிகர் சூர்யா ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்குவது போற்றுதலுக்குரியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது”

‘கலைநாயகன்’ சூர்யா:

“புரட்சிகரமான சமூக மாற்றங்களுக்கு மிகப்பெரும் உந்துதலாகத் திரை ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் திரைப்படங்களின் வரிசையில் இன்று ‘ஜெய்பீம்’ திரைப்படமும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. துணிந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கவும் நடிக்கவும் முன்வந்ததன் மூலம் தனது சமூகப் பொறுப்புணர்வையும் முற்போக்கு சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ள ‘கலைநாயகன்’ சூர்யா அவர்களையும், அதனை உயிர்ப்புடன் படைப்பாக்கம் செய்துள்ள இளம் இயக்குநர் த.செ.ஞானவேலு அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம்.

திரைப்படம் என்னும் வலிமைமிகு ஊடகத்தை, சமூக மாற்றங்களுக்கான புதிய சிந்தனைகளை- புரட்சிகரமான கருத்துகளை இலகுவாக வெகுமக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்குரிய கருவியாகப் பயன்படுத்தும் போக்கு தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலமாகவே நடைமுறையிலிருந்து வருகிறது.

சமூகச் சீர்திருத்தத்தக் கருத்து-எம்ஜிஆர், சிவாஜி பங்கு:

சனாதன பிற்போக்குக் கருத்தியலின் மேலாதிக்கத்திலிருந்து மக்களை மெல்ல மெல்ல மீட்கும் வகையில் திரை ஊடகத்தை வெற்றிகரமாகக் கையாண்ட அரசியல் இயக்கம் இந்தியாவிலேயே திராவிட இயக்கம் தான் என்பது நாடறிந்த உண்மையாகும். குறிப்பாக, பேரறிஞர் அண்ணா சமத்துவப் பெரியார் கலைஞர் ஆகியோர் அதனை வெகுசிறப்பாகக் கையாண்டனர். எம்.ஆர்.இராதா, கலைவாணர் என்.எஸ்.கே, கே.ஆர்.இராமசாமி போன்ற மகத்தான கலை ஆளுமைகளைப் பயன்படுத்தி சாதி, மதம் தொடர்பான மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பினர். திராவிட இயக்கத்தின் சமூகச் சீர்திருத்தத்தக் கருத்துக்களை வெகுமக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததில் எம்ஜிஆர், சிவாஜி முதலானோரும் மிகப்பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

இத்தகைய கேடான ஒரு சூழலில் அரங்கேறியுள்ள ஜெய்பீம்:

அவ்வாறு முற்போக்கான சமூக மாற்றங்களுக்குரிய திசைவழியில் வீறுநடை போட்ட தமிழ்த் திரையுலகம், இடைக்காலத்தில் முற்றிலும் வணிகநோக்கில் திசை தவறி பின்னோக்கிச் சென்றது. குறிப்பாக, கடந்த சில பத்தாண்டுகளில் சனாதன பிற்போக்குக் கும்பல் சாதிய- மதவாத நச்சுக் கருத்துகளைப் பரப்புவதற்கு அதனைப் பயன்படுத்தி வருவதும், அத்தகைய சீரழிவுப் போக்குகளைச் சில அரசியல் சக்திகள் ஊக்குவித்து வருவதும் மிகுந்த வேதனை அளிப்பதாக இருந்தது.

இத்தகைய கேடான ஒரு சூழலில் அரங்கேறியுள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படம், மீண்டும் தமிழ்த் திரைத் துறையை உலக அரங்கில் தலைநிமிர வைத்துள்ளது. அதனை மிகவும் சரியான முற்போக்கான பாதைக்குத் திருப்பியுள்ளது. இதற்காக அப்படத்தின் முதன்மைப் பாத்திரமேற்றுள்ள நடிகர் என்கிற முறையிலும், அதன் தயாரிப்பாளர் என்கிற முறையிலும் ‘கலை நாயகன்’ சூர்யா அவர்களையும் இயக்குநர் த.செ.ஞானவேல் அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.

எவ்வளவு குரூரம் வாய்ந்ததாக எளியோரின் குருதியைக் குடிக்கிறது?:

தமிழகத்திலுள்ள பழங்குடியினரில் குறவர். இருளர், காட்டுநாய்க்கர் ஆகிய சமூகப்பிரிவினர்தாம் இத்தகைய பொய்வழக்குகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, குறவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இவ்வழக்கில் அரச வன்கொடுமைக்குப் பலியான ராஜ்கண்ணு என்பவர் குறவர் குடியைச் சார்ந்தவர் தான். திரைக் கதையிலும் அப்பாத்திரத்தைக் குறவர் என்றே கூறியிருந்தால், ஒட்டுமொத்த குறவர் குடியினருக்கும் சற்று ஆறுதலாகவும் சமூகப் பாதுகாப்பு உணர்வளிப்பதாகவும் அமைந்திருக்கும்.

எனினும், ஜெய்பீம் திரைப்படம் எளியோருக்கு எதிரான அரசப் பயங்கரவாதத்தை மிகவும் துல்லியமாக அம்பலப்படுத்தியுள்ளது. சட்டமும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் காவல்துறை உள்ளிட்ட ஆட்சி நிர்வாக அமைப்புகளும் எவ்வாறு தலித் மற்றும் பழங்குடியினர் போன்ற விளிம்புநிலை மக்களுக்கு எதிராக இயங்குகின்றன? அவை சாதிய- மதவாத தற்குறி கும்பலால் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன? மாந்தநேயமில்லாத ஆதிக்க வெறியர்களின் கைகளில் சிக்கும் ஆட்சிநிர்வாக அதிகாரம் எவ்வளவு குரூரம் வாய்ந்ததாக எளியோரின் குருதியைக் குடிக்கிறது? போன்றவற்றையெல்லாம் இப்படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது! சட்டம், அதிகாரம் போன்றவற்றின் பயன்பாடு குறித்து ஒரு மாபெரும் விவாதத்தையும் பொதுவெளியில் உருவாக்கியிருக்கிறது.

ஊபா என்னும் கொடிய சட்டம்:

அதே வேளையில் வழக்கறிஞர் சந்துரு போன்ற துணிச்சல்மிக்க – மனித நேயமிக்க போராளிகளால் அதே சட்டத்தின் மூலம் பாதிக்கப்படோருக்கான நீதியை வென்றெடுக்க இயலும் என்கிற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன், இப்படத்திற்கு இன்று சனநாயக சக்திகளிடையே பெருகியுள்ள வரவேற்பானது,எளிய மக்களுக்காகத் தொண்டாற்றும் வழக்குரைஞர்களுக்குப் பெருமளவில் ஊக்கத்தையும் அளித்திருக்கிறது.

வழக்கறிஞர் சந்துருவைப் போல மக்களுக்காக வாதாடும் போராடும் வழக்கறிஞர்கள் இன்று சனாதன பாஜக அரசால் ஊபா( UAPA) என்னும் கொடிய சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் இத்திரைப்படம் வெளிவந்து இன்று சமூகத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்கமானது, UAPA போன்ற கறுப்புச் சட்டங்களை ரத்து செய்வதற்கும், காவல்துறையைச் சீர்திருத்துவதற்கும் ஏதுவாக மக்களிடையே உரிய எழுச்சியை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 2%:

இந்திய சாதியச் சமூகத்தில் அட்டவணை சாதிகளான (எஸ்சி) ஆதிக்குடியினர் சந்திக்கும் தீண்டாமை போன்ற சமூகக் கொடுமைகளையும் அரச வன்கொடுமைகளையும் திரைப்படங்கள் மூலமாக முற்றும் விவரிக்க இயலாது. அவ்வாறான தீண்டாமைக் கொடுமைகளை அனுபவிக்கவில்லை என்றாலும், எண்ணிக்கையில் சிறுபான்மையினராக, சிதறுண்ட வர்களாக, வனங்களில், மலைகளில் வாழ்பவர்களாக இருக்கின்ற காரணத்தால் பழங்குடி மக்கள் சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாதார நிலைகளில் மிகவும் மோசமாக நசுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 2% ஆக இருக்கும் அவர்களது வாழ்நிலை குறித்து பெரும்பாலோர் கவலைப்படுவதில்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவர்களுக்காகத் தொடர்ந்து முப்பதாண்டுகளாகப் பாடாற்றி வருகிறது. ‘பழங்குடியினர் விடுதலை இயக்கம்’ என்னும் துணைநிலை அமைப்பை உருவாக்கி எண்ணற்ற போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தி அவர்களை அரசியல்படுத்தி அமைப்பாக்கி வருகிறது.

நரிக்குறவர் நல வாரியம்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் ரவிக்குமார் அவர்கள் 2006இல் சட்டப் பேரவையில் எழுப்பிய கோரிக்கையின் விளைவாக அன்றைய திமுக ஆட்சியில் “நரிக்குறவர் நல வாரியம்” உருவாக்கப்பட்டது. அவர்களுக்காக வடலூரில் சிறப்புப் பள்ளியொன்றும் துவக்கப்பட்டது.

அண்மையில், திருப்போரூர் பகுதியில் நரிக்குறவர் சமூகப்பெண் ஒருவர் கோயில் அன்னதான நிகழ்வில் அவமதிக்கப்பட்டபோது அவருக்கு சமத்துவ உரிமை கிடைக்கச் செய்ததில் எமது கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பழங்குடி இருளர் சமூகத்தினரின் பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டுமென வலியறுத்தியும், அம்மக்கள் மீதான வன்கொடுமைகளை எதிர்த்தும் ‘பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தோடு’ இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்றும் தொடர்ந்து போராடி வருகிறது.

குறவர், இருளர், காட்டுநாய்க்கர், குருமன்ஸ், மலையாளி உள்ளிட்ட ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தினரை இத்கைய அரசவன்கொடுமைகளிலிருந்து மீட்கவும் அவர்களின் வாழ்வை மேம்படுத்தவும் தமிழக அரசால் முடியும். அதற்கான தூண்டுதலை இந்தத் திரைப்படம் தந்துள்ளது என்று நம்புகிறோம். அண்மையில், தமிழ்நாடு முழுவதும் பழங்குடி மக்களுக்குரிய அரசுத் திட்டங்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கான அரசாணையை மாண்புமிகு முதல்வர் பிறப்பித்திருப்பதே அதற்குச் சான்றாகும்.

நடிகர் சூர்யா ஒரு நல்ல முன்மாதிரி:

இத்திரைப்படத்தின் வருவாயிலிருந்து ஒரு கோடி ரூபாயை ‘பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளைக்கு’ நன்கொடையாக அளித்திருப்பது நடிகர் சூர்யாவின் பரந்த உள்ளத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே, அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் கல்விக்காக உதவி வருவது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். எளியோரின் மீதான இவரின் இத்தகு அக்கறையும் கனிவும் பாராட்டுதலுக்குரியதாகும்

அத்துடன், பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற திரைக் கலைஞர் ஒருவர் தனக்குள்ள புகழையும் செல்வாக்கையும் எவ்வாறு எளிய மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு நடிகர் சூர்யா ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்குவது போற்றுதலுக்குரியதாகும்.

‘ஜெய்பீம்’ திரைப்படத்தினூடாக, காலம்காலமாய் எவராலும் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டோரைக் குற்ற உணர்வுடன் ஒவ்வொருவரையும் உற்றுக் கவனிக்க வைத்த- எங்குமே எப்போதுமே கேட்கப்படாதோரின் கதறியழும் அவலக்குரலை அழுத கண்களுடன் அகிலத்தையே கேட்கவைத்த- பாதிக்கப் பட்டோருக்காகச் சட்டத்தின்வழி போராடி வென்ற சமூகநீதிப் போராளியைப் போற்றி பெருமைப்படுத்திய கலைநாயகன் சூர்யா அவர்களின் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய தொண்டுள்ளத்தை தொழிலறத்தை – விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்