கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது – ப.சிதம்பரம் ட்வீட்
கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நேற்று திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,’இன்று விமான நிலையத்தில் ஒரு விமானநிலைய அதிகாரி என்னிடம் இந்தியனா என ஹிந்தி மொழியில் கேட்டார். எனக்கு இந்தி தெரியாததால் என்னுடன் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டுகொண்டேன். இந்தியனாக இருப்பதே, இந்தியை அறிந்து வைத்து கொள்வதற்கு சமமானது என்பதை நான் இன்று அறிந்துகொண்டேன்’ என்று பதிவிட்டார்.கனிமொழியின் இந்த பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,திருமதி கனிமொழி MP அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது.இந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் வலுத்து வருகிறது.
இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் (official languages) என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும்.
மத்திய அரசு பணியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் வலுத்து வருகிறது
— P. Chidambaram (@PChidambaram_IN) August 10, 2020