மாணவிகள் கவனத்திற்கு., பெயர் கூட எழுத வேண்டாம்.. அமைச்சர் கொடுத்த அட்வைஸ்.!
திருச்சி : பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12 வயது மாணவிக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் புகார் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் புகாரில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சிவராமன் உட்பட 11 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து முழுமையான விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
கிருஷ்ணகிரி சம்பவம் குறித்தும், அது தொடர்பான நடவடிக்கை குறித்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், “பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் தற்போது ஓர் தைரியமான சூழ்நிலையில் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பள்ளியின் கழிவறை முதற்கொண்டு சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். கிருஷ்ணகிரியில் நடந்த இந்த மாதிரியான சம்பவம் மனதிற்கு வேதனை அளிக்கிறது.
என்ன தான் போக்ஸோ சட்டம் பாயும் என்று சொன்னாலும், மாற்றம் மனதளவில் வர வேண்டும். வயதில் பெரியவர்கள் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. என்னைப் பொறுத்தவரை சம்பவத்தில் உண்மைத் தன்மை இருப்பின் குற்றவாளிக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிக்கு நாங்கள் கூறிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். தயவுசெய்து, உங்கள் பள்ளிக்கூடத்தில் தவறு நடந்தால் அதனை மூடி மறைக்காதீர்கள். நீங்கள், எங்கள் பள்ளியில் இந்த தவறு நடந்துள்ளது. அதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினால் தான் பெற்றோர்களுக்கு உங்கள் பள்ளி மீது நம்பிக்கை ஏற்படும். தனியார் பள்ளி, அரசுப்பள்ளி, அரசு சார்பு பள்ளி என எந்த பள்ளியாக இருந்தாலும், தவறு நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள். அதனால் உங்கள் பள்ளி பெயர் கெட்டுப்போகாது.
தற்போது கிருஷ்ணகிரி பள்ளி விவகாரத்தை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை சார்பாக, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கான நடவடடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். 800 மருத்துவர்கள் கொண்ட குழு தமிழகம் முழுக்க உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு கவுன்சலிங் அளித்து வருகின்றனர்.
மாணவ, மாணவிகள் உங்கள் பள்ளியில் இதுபோன்ற பிரச்சனை இருக்கிறது என பெயர் கூட எழுதாமல் புகார் தெரிவித்தால் போதும். நாங்கள் அதற்கான நடவடிக்கை எடுப்போம். எந்த முகாம் நடத்த வேண்டுமானாலும் , அதற்குரிய அதிகாரிகளிடம் அனுமதி வாங்கிவிட்டு பள்ளி நிர்வாகங்கள் அந்த முகாம்களை நடத்தட்டும்.” என அன்பில் மகேஷ் கூறினார்.