“எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தது காட்டுமிராண்டித்தனம் ,கடுமையாக கண்டிக்கத்தக்கது”- முதல்வர் பழனிச்சாமி
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த காட்டுமிராண்டித்தனம், கடுமையாக கண்டிக்கத்தக்கது என தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் எம்ஜிஆர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு நேற்று காவித்துண்டு அணிவித்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அங்கிருந்து சென்றனர். மேலும், இது தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தமிழக முதல்வர் பழனிச்சாமி, புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்தியது மனவேதனை அளிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்து சுதந்திரமென்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால் பிறர் மனங்களை காயப்படுத்துவது மனித நாகரீகத்திற்கு எதிரானது என தெரிவித்த அவர், எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது எனவும், சமூக தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது வருத்தத்தை தருகிறது என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, சிலைக்கு அவமரியாதை ஏற்படுத்திய விஷமிகள் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்த புதுச்சேரி முதல்வருக்கு வலியுறுத்தி உள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. நேற்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.