“நடிகர் சூர்யா மீது நடத்தப்படும் தாக்குதல் உள்நோக்கம் கொண்டது!”- கே.எஸ். அழகிரி
நடிகர் சூர்யா மீது குறி வைக்கப்பட்டால், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் துணை நிற்கும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நாடு முழுவதும் நடந்தது. இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்காரணமாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது, மனசாட்சியை உலுக்கியது. கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, நடிகர் சூர்யா மீது நடத்தப்படும் தாக்குதல், உள்நோக்கம் கொண்டது என தெரிவித்தார்.
மேலும், கோபத்தால் சூர்யா அப்படி கூறியதாக ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் கூறியது சரியான தீர்ப்பு என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நடிகர் சூர்யா மீது குறி வைக்கப்பட்டால், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.