“தமிழக மண்ணில் ஒருபோதும் தமிழர் விரோத பாஜக வேறூன்ற அனுமதிக்கக்கூடாது” – ஜோதிமணி எம்பி ட்வீட்

Default Image

பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொரு முறை நிரூபித்துள்ளது என்று ஜோதிமணி எம்பி ட்வீட்.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட 13 பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய முதலமைச்சர், நீட் விலக்கு பெரும் சட்ட முன்வடிவு கடந்த செப் 13ம் தேதி சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர், இந்த சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதல் பெற மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளார் என்றும் இது சட்டமன்ற மாண்பை சிதைகிறது எனவும் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மதித்து ஆளுநர் ஒப்புதல் அளிப்பதே மக்களாட்சியின் தத்துவம் என்றும் தீர்மானத்தின் மீது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதன்பின்னர் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக நடவடிக்கை வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தீர்மானத்துக்கு, அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜகவை தவிர மற்ற 12 கட்சிகளும் நீட் விலக்கிற்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக சார்பில் பங்கேற்ற கோவை தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை. மருத்துவ மாணவர் சேர்ககையில் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாகக் கூறுவதை ஏற்கவில்லை.

நீட் தேர்வால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுகிறது எனக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. நீட் தேர்வால் இட ஒதுக்கீடு எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை, சமூக நீதிக்கு எள் முனையளவுக்கும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இந்தநிலையில், தமிழக மண்ணில் ஒருபோதும் தமிழர் விரோத பாஜக வேறூன்ற அனுமதிக்கக்கூடாது” என்று காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், நீட்டுக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நிற்கும்போது பாஜக மட்டும் நீட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழக மண்ணில் ஒருபோதும் தமிழர் விரோத பாஜக வேறூன்ற அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்