விடியா திமுக ஆட்சியில் சமூக விரோதிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது – ஈபிஎஸ் அறிக்கை

Default Image

தமிழகத்தில் நடைபெற்று வரும் கடந்த 5 மாத கால தி.மு.க-வின் விடியா ஆட்சியில், சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைந்து, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது, உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளது.

திமுக ஆட்சியில் சமூக விரோதிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடுவதாகவும், நாட்டில் பெருகி வரும் குற்றச் சம்பவங்களை ஒடுக்குவதும், கிரிமினல்களை அடக்குவதும், மக்களை சுதந்திரமாக பயமின்றி இயங்க வைப்பதும், காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்வரின் தலையாய கடமை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் நடைபெற்று வரும் கடந்த 5 மாத கால தி.மு.க-வின் விடியா ஆட்சியில், சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைந்து, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது, உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளது. 2011-ல் மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது,

தமிழகத்தில் வடமாநிலக் கொள்ளையர்கள் மற்றும் தமிழ் நாட்டு கிரிமினல்களின் அட்டகாசம் அதிக அளவில் இருந்தது. மாண்புமிகு அம்மா அவர்கள் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இரும்புக் கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டதன் காரணமாக குற்றவாளிகள் அடக்கி ஒடுக்கப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டது. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்பட்டு, தமிழ் நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. மாண்புமிகு அம்மா அவர்களைத் தொடர்ந்து, அம்மாவின் அரசும் இரும்புக் கரம் கொண்டு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக குற்றங்கள் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டன.

  • கடந்த 5 மாதங்களாக வடமாநிலங்களைச் சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், சர்வ சாதாரணமாக விமானத்தில் வந்திறங்கி, தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் வங்கி ATM கொள்ளை, செயின் பறிப்பு, ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.
  • அதே போல் திமுக பிரமுகர்கள், காவல் துறையினர் மற்றும் அரசு ஊழியர்களை மிரட்டுவதும், மணல் கடத்தலும், பல இடங்களில் நடப்பதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
  • கஞ்சா, ஹெராயின் மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

கடந்த வாரத்தில் தமிழகத்தில் அனைத்து ஊடகங்களிலும், செய்திகளிலும் பெரிய அளவில் பேசப்பட்ட குற்ற சம்பவங்கள் :

  • வட மாநிலமான குஜராத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ஹெராயின் என்ற போதை பொருள் சிக்கியுள்ளது. இது தொடர்பாக ஆந்திராவிலும், சென்னையிலும் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) வேட்டை தீவிரமாகி உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
  • போதைப் பொருட்கள் அன்னிய நாடுகளில் இருந்து, நம் நாடு முழுவதும் கடத்தி விற்பதற்கு வழித் தடமாக சென்னையும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களும் அமைந்துள்ளதாக வரும் செய்திகள் ஜனநாயகத்தில் பற்றுள்ளவர்களை உலுக்குகிறது.
  • போதைப் பொருள் என்பது, ஏதோ சிலரின் போதைக்கு, பலர் கடத்தலில் ஈடுபட்டு பெரும் பணம் சம்பாதிக்கின்றனர் என்பது மட்டுமல்ல, இந்த போதைப் பொருள் கடத்தல் மூலம் புரளும் பல கோடி ரூபாய் பணம் என்பது நாட்டை சுடுகாடாக்கும் தேச விரோதம், குண்டு வெடிப்பு உட்பட பல தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, போதைப் பொருள் நடமாட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று காவல் துறையினரை கேட்டுக்கொள்கிறேன்.
  • பசுபதி பாண்டியன் கொலையில் சம்பந்தப்பட்டதாகக் கருதி ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு, அவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்ட அவலம்.
  • வாணியம்பாடியில் இஸ்லாமியச் சகோதரர் தொழுகை முடிந்து வரும்போது 7 வயது மகன் கண் முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.
  • தாம்பரம் ரயில் நிலையம் அருகே இளம் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
  • தமிழ் நாட்டில் திமுக ஆட்சி ஏற்பட்ட நாள் முதல், சர்வ சாதாரணமாக கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. இது, மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இப்படி குற்றச் சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இது போன்ற சம்பவங்கள் தமிழக மக்களை பீதியில் ஆழ்த்துவதோடு மட்டுமல்லாமல், கொதிப்படையவும் வைத்துள்ளது. இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது.

இந்த அரசின் இயலாமையை உணர்ந்த ஆளுநர் அவர்கள், தமிழக DGP-யை அழைத்து வழங்கிய அறிவுரைக்குப் பின், சுமார் 12,000 பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. இதில் 2,000 பேர் வரை ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், மேலும் சுமார் 1,750 பேர் வரை நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெற்று விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 8,000 நபர்கள் யார், அவர்களது நிலை என்ன, அவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள் என்று தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

“தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடியல் பிறக்கும் என்று தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள், நாள்தோறும் விடிந்தால் என்ன தகாத சம்பவங்கள் தங்களைச் சுற்றி நடக்குமோ என்ற பாதுகாப்பற்ற நிலையில், பீதியில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.” தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மேலும் சீரழியாமல், மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்த ஆட்சியாளர்களுக்கு உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நாட்டில் பெருகி வரும் குற்றச் சம்பவங்களை ஒடுக்குவதும், கிரிமினல்களை அடக்குவதும், மக்களை சுதந்திரமாக பயமின்றி இயங்க வைப்பதும், காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்வரின் தலையாய கடமையாகும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்