மாநாடு குறித்து காவல்துறை எழுப்பிய கேள்விக்கு நாளை பதில்: தவெக அறிவிப்பு.!
மாநாடு நடத்துவது குறித்து காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார்.
இதனையடுத்து, மாநாடு நடத்துவதற்கு முன்பே மக்களின் பாதுகாப்புகளை கருதி காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் ஒன்று த.வெ.கட்சிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் மிகவும் முக்கிய கேள்வியாக ‘மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம் குறித்த தகவலை கொடுக்கவேண்டும் என கேட்டுள்ளது.
அந்த கேள்விக்கு முக்கியமான காரணம் என்னவென்றால், விஜய் படங்களின் இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது என்றாலே, அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்பது தெரியும். எனவே, முதல் முறையாக கட்சித் தொடங்கி அவர் த.வெ.க மாநாட்டை நடத்துகிறார் என்றால் நிச்சியமாக அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் வருகை தருவார்கள்.
ஏற்கனவே, அவர் நடிப்பில், வெளியான பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது கூட, ஒதுக்கப்பட்ட இருக்கைகளைத் தாண்டி பல விஜய் ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நிகழ்வு பெரிய சர்ச்சையாகவும் அந்த சமயம் வெடித்தது.
எனவே, இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வீர்கள் என்கிற வகையில் இந்த கேள்விகளை காவல்துறை சார்பில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
அதைப்போல, மற்றோரு முக்கிய கேள்வியாக “மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளதா? அந்த இடத்தின் உரிமையாளர் யார்?” அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்கிற கேள்வியையும் காவல்துறை கேட்டுள்ளது. ஏனென்றால், பலர் மாநாட்டிற்கு வருவார்கள். பலரும் வருவதால் அவர்களுடைய பாதுகாப்பை போல அவர்கள் வரும் வாகனங்களும் எந்த வித பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்படவேண்டியது முக்கியமான ஒன்று.
மேலும், மாநாட்டுக்கு அனுமதிகேட்டு வழங்கப்பட்டுள்ள மனுவில் மாநாடு எவ்வளவு நேரம் நடைபெறும் என்பதற்கான நேரம் குறிப்பிடப்படவில்லை என்பதால் நேரத்தையும் சரியாக கூறவேண்டும் எனவும் காவல்துறை சார்பில் கேள்விகேட்கப்பட்டுள்ளது.
காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என தவெக நிர்வாகிகள் சார்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தி பதில் அறிக்கை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, த.வெ.க பதில் கூறி, அதற்கு காவல்துறை அனுமதி அளித்த பின்பு தான் மாநாடு நடைபெறும். எனவே, அனுமதி அளித்தபிறகு மாநாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.