#BREAKING: முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு – தமிழக அரசு..!
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கான ஆண்டு வருமான வரம்பு 72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரமாக உயர்வு.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கான ஆண்டு வருமான வரம்பு 72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் உடையவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் முதல்வர் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசால் 23.07.2009 அன்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியின் குடும்பத்திற்கு ரூ.1 இலட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற காப்பீடு செய்யப்பட்டது. இக்காப்பீட்டுத் திட்டத்தின் தொடர்ச்சியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 11.01.2012 முதல் விரிவாக்கம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அரசாணை (நிலை) எண்.169, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதி 2-(2)) துறை, நாள் 11.07.2011-ல் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு தற்போது வரை ஆண்டு வருமான வரம்பில் எந்தவித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா’ என்ற திட்டத்தினை ஒருங்கிணைத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கும் காப்பீட்டுத் தொகை ரூ. 5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கை மற்றும் கருத்துருவின் அடிப்படையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தற்போது வரையறுக்கப்பட்டுள்ள குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-ஆக உள்ளதை ரூ.1.20,000/-ஆக உயர்த்தலாம் என தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநரி கருத்துருவினை அரசு நன்கு பரிசீலனை செய்து, 11.01.2022 முதல் புதியதாக நீட்டிக்கப்படவுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பை ரூ.72,000/-லிருந்து ரூ.1,20,000/-ஆக உயர்த்தலாம் என ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.