“ரவுடிகள் ராஜ்யத்திற்கு ‘பெர்மிட்’ வழங்கியுள்ள அராஜக ஆட்சி – மு.க. ஸ்டாலின்

Published by
Venu
“ரவுடிகள் ராஜ்யத்திற்கு ‘பெர்மிட்’ வழங்கியுள்ள அராஜக ஆட்சி ” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக  திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள  அறிக்கையில் ,“பொது அமைதியைக் காப்பதிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் தமிழகம் திறம்படச் செயல்பட்டுள்ளது” என்ற முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களின் பேச்சை, ‘பச்சைப் பொய்’ என தற்போது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை நிரூபித்துள்ளது. ‘கூவத்தூர்’ கொண்டாட்டம் மூலம் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திரு. பழனிசாமியின் முதல் இரண்டு ஆண்டுகளான – 2017, 2018-ம் ஆண்டுகளுக்குரிய ஆவணக் காப்பகத்தின் அறிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு எப்படி படுதோல்வியடைந்து பரிதாபமாக நிற்கிறது என்பது விளங்கும்.
இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் உள்ளூர், சிறப்புச் சட்டங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியின் அந்த இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முறையே 4.20 லட்சம், 4.99 லட்சம் என்று உயர்ந்து விட்டன. குற்றச் செயல்களும் 18.61 சதவீதம் அதிகரித்து விட்டன. கொலைக் குற்றங்களில் சென்னையில் 11.69 சதவீதமும், கோவையில் 47.62 சதவீதமாகவும் அதிகரித்து; மாநகரம் இரண்டிலும் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற ஆபத்தான சூழலை அ.தி.மு.க. ஆட்சி உருவாக்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில்; கோவையில் 40.79 சதவீதமாகவும், சென்னையில் 18.54 சதவீதமாகவும் அதிகரித்து; பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநகரங்களாகச் சென்னையையும், கோயம்புத்தூரையும் மாற்றிக் காட்டியதுதான் முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆட்சியின் சாதனை(!).
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியாமல், அ.தி.மு.க. ஆட்சி தடுமாறுகிறது என்பதைப் பகிரங்கப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 17.74 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
சென்னையில் மட்டும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 211.24 சதவீதம் அதிகரித்துள்ளது என்றால்; பெண்களும், குழந்தைகளும் திரு. பழனிசாமியின் ஆட்சியில் முற்றிலும் பாதுகாப்பின்றி ஆபத்தின் வளையத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது புலனாகியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் 2018-ல் மட்டும் 3162 குற்றங்கள் நிகழ்ந்து; மூத்த குடிமக்களுக்கு எதிரான வன்முறையில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது மாநிலமாகி விட்டது. அனைத்திற்கும் மேலாக, போலீஸ் பாதுகாப்பின்போது (கஸ்டடியில்) நிகழும் மரணங்களில், இந்தியாவிலேயே குஜராத்திற்கு அடுத்த படியாக, தமிழகம் இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டது. மனித உரிமைகளுக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் சம்பந்தமில்லாத ஓர் ஆட்சியை முதலமைச்சர் திரு. பழனிசாமி நடத்தி வருவது, ஆதாரபூர்வமாக தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தனது துறையின் சார்பில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள கொலை வழக்குகளின் எண்ணிக்கையிலும் புகுந்து குளறுபடி செய்திருக்கிறார் முதலமைச்சர் திரு. பழனிசாமி. ஓர் உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், அரசின் சார்பில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்கு – 2018-ல் நிகழ்ந்ததாகக் கொடுத்த கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை 1569; ஆனால் முதலமைச்சர் தானே சட்டமன்றத்தில் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை 1488. இப்போது தமிழகத்தில் கொரோனா மரணங்களை மறைத்துப் பொய்த் தகவல்களைக் கொடுப்பதைப் போல், அப்போதே 81 கொலைகளை மறைத்துள்ளார். ஆகவே ‘கணக்கை மறைப்பது’, தனக்கு அவப்பெயர் ஏற்படும் என்று அறிந்து எண்ணிக்கையைக் குறைப்பது, முதலமைச்சர் திரு. பழனிசாமிக்குக் கை வந்த கலையாகி – முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தையும் குறைத்து விட்டார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்குக் காரணமாகி – மிகச்சிறந்த தமிழகக் காவல்துறையை தங்களுடைய ஆதாயத்திற்காக அரசியல் மயமாக்கி – அதை அ.தி.மு.க. சொன்னபடி ஆடும் ‘கைப்பாவையாக’ மாற்றி, இன்றைக்கு மக்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘ஒரு கொலை ரூ.6000’; ‘மிரள வைக்கும் ரவுடிகள். அலறும் தமிழகம்’ என்று இன்று ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை – அ.தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் ராஜ்யம் எப்படி தலைதூக்கி கோரத் தாண்டவமாடுகிறது – அதைத் தடுக்க முடியாமல் தமிழ்நாடு காவல்துறையின் கைகள் எப்படிக் கட்டப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பற்ற ஆபத்தான ஆட்சியாக இருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி – மாநிலத்தின் பொருளாதார – தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி; அமைதிக்கும், மக்களின் பாதுகாப்பிற்குமே மிகப்பெரிய சாபக்கேடு மட்டுமல்ல; தமிழ்நாட்டில் ‘ரவுடிகள் ராஜ்யத்திற்கு’ மாநில அளவிலான ‘பெர்மிட்’ வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி என்று, ஆதாரங்களின் அடிப்படையில், பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…

3 mins ago

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

32 mins ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

3 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

3 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

4 hours ago

விடுமுறை இல்ல!! நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும்.!

சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…

5 hours ago