“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!
பாவப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்ட அதிமுக மீண்டு வரவேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' புத்தக வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
சென்னை : தேர்தல் 2024 மீளும் ‘மக்கள்’ ஆட்சி’ என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் கலந்துகொண்ட அவர் பாஜகவால் பல கட்சிகள் காணாமல் போனதாக விமர்சித்து பேசினார்.
இது குறித்து அவர் பேசியதாவது ” ஒரு மிஸ்ட் கால் கொடுத்தாலே பாஜகவில் சேரலாம் என விளம்பரம் செய்தார்கள். ஆனால், இறுதியாக தன்னுடைய சொந்த காலில் நிற்கமுடியாமல் இன்று சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாருடைய கால்களை பிடித்து ஆட்சியை நடத்துகிறார்கள்” என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி “மேலும் பல்வேறு அரசியல் விவகாரம் குறித்தும் பேசினார். அதில் ” பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் இந்த புத்தககத்தில் பாஜகவோடு கூட்டணி வைத்த கட்சிகளின் நிலைமை இப்போது எப்படி உள்ளது என்பது குறித்து முக்கியமான விஷயத்தை எழுதியுள்ளார்.
குறிப்பாக, மகாராஸ்டிராவில் சிவசேனா கட்சி காணாமல் போனது. அதைப்போல, காஷ்மீரில் மக்கள் மாநாட்டு கட்சி என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் என பல்வேறு கட்சிகளை பாஜக காலி செய்துவிட்டது.
ஆனால், பாஜக காலி செய்த கட்சிகளின் லிஸ்டில் முதலில் இருப்பது எந்த கட்சி “தெரியுமா”? என உதயநிதி ஸ்டாலின் சிரித்துக்கொண்டே கேட்டார். பிறகு ” இப்படிப்பட்ட பாவப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்ட நம்மளுடைய “எதிர்க்கட்சி.”( அதிமுக) தான் எனவும் கூறினார். அது மட்டுமின்றி, “அந்த கட்சி மீண்டு வரவேண்டும்” எனவும் தனது விருப்பத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழா மேடையில் தெரிவித்தார்.