தனியார் லாரிகள் அதிக விலையில் தண்ணீர் விற்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தனியார் லாரிகள் அதிக விலையில் தண்ணீர் விற்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 560 கனஅடி நீர், ஜூன் 15-ம் தேதி வரை வினியோகம் செய்ய முடியும் .
அதன் பிறகும் மழை பெய்யாவிட்டாலும் 500 கனஅடி நீர் அக்டோபர் வரை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
126 சிறிய லாரிகள் மூலம் குறுகிய சாலையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. நாள் தோறும் 9 ஆயிரம் நடை குடிநீர் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தனியார் லாரிகள் அதிக விலையில் தண்ணீர் விற்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு விலை நிர்ணயிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.