பாஜக அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது – மு.க.ஸ்டாலின்
மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பா.ஜ.க அரசு இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம்.
மேற்கு வங்காளத்தில் பணியாற்றும் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பா.ஜ.க அரசு இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது. மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது. மத்திய அரசானது தம் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் குடிமைப்பணிகளில் ஆணையிடுதல் கூடாது. பிரதமர் மோடி அவர்கள் இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, கடந்த 10-ம் தேதி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மேற்கு வங்கம் சென்றிருந்த போது, அவரது பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனம் மீது மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மேற்கு வங்க தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியை நேரில் ஆஜராகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் ஆஜராகத் தேவையில்லை எனக் கூறி அம்மாநில அரசு மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து, ஜே.பி.நட்டாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க போலீஸ் ஐ.ஜி. ராஜீவ் மிஸ்ரா, டி.ஐ.ஜி. பிரவீன் குமார் திரிபாதி மற்றும் எஸ்.பி. போலாநாத் பாண்டே ஆகியோரை மத்திய அரசுப் பணிக்கு இடமாற்றி மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி தமது அரசு ஒருபோதும் அடிபணியாது என விமர்சித்துள்ளார். இந்நிலையில், மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The unilateral transfer of 3 West Bengal IPS officers by the Union BJP Govt is autocratic and anti-federal.
The civil service of the country must not be dictated by the whims and fancies of the ruling party in Delhi.
I urge @PMOIndia to immediately rescind the transfer order. https://t.co/DQoM7JGRNi
— M.K.Stalin (@mkstalin) December 19, 2020