முதலமைச்சர் பழனிச்சாமிக்கும், தமிழக காவல்துறைக்கும் நன்றி -ஆ.ராசா

Default Image

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று   தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் , கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு காவல் ஆணையர் அலுவலகத்தில் செல்வகுமார் என்பவர் புகார் கொடுத்தார்.இந்த புகாரின் பேரில் ஆ.ராசா மீது இரண்டு பிரிவு கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கண்டனங்கள் குறித்து நான் முதல்வருக்கு எழுதிய திறந்த மடலில் உள்ள எந்த கருத்தையும், வார்த்தையையும் பொய் என்றோ, புனைவு என்றோ மெய்ப்பிக்க வக்கற்ற முதலமைச்சர், தமிழக காவல்துறை மூலம் கோழைத்தனமாக இவ்வழக்கை என்மீது தொடுத்துள்ளார். தமிழக காவல்துறை தொடர்ந்துள்ள இவ்வழக்கின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமேயானால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய கண்டன கருத்துக்களை விசாரணை நீதிமன்றத்திலேயே உண்மை என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்ற அந்த அடிப்படையில் இவ்வழக்கை வரவேற்று, முதலமைச்சருக்கும், தமிழக காவல்துறைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்மீது போடப்படும் வழக்கை பயன்படுத்தியே ஜெயலலிதா செய்த ஊழலையும், ஜெயலலிதாவை பின்தொடர்ந்து அவரை போலவே ஊழலில் திளைக்கும் முதலமைச்சரையும், இந்த அரசையும் தோலுரித்து காட்டுவதோடு விரைவில் அமையவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், இப்போது ஊழலில் திளைக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்