என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு நன்றி – விவேக் மனைவி உருக்கம்..!!
என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி என்று மறைந்த நடிகர் விவேக் மனைவி அருட்செல்வி விவேக் கூறியுள்ளார்.
நகைசுவை நடிகர் விவேக் (59), நேற்று முன்தினம் காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
நேற்று காலை முதலே பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவருமே நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு, சமூக கலை பணியை கௌரவிக்கும் பொருட்டு, காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவித்திருருந்த நிலையில், சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில், 78 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பின் காவல்துறையினரின் 2 நிமிட மௌன அஞ்சலிக்கு பின், அவரது பூத உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய விவேக்கின் மனைவி அருட்செல்வி விவேக் கூறியது ” அனைவருக்கும் வணக்கம் இந்த ஒரு நேரத்தில் என் கணவரை இழந்து நிற்கிற எங்கள் குடும்பத்திற்கு பக்கபலமாகவும் ஒரு மிகப்பெரிய துணையாக இருந்த மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கு எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றி. என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி அதை என்றைக்குமே நாங்கள் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம். நீங்கள் என் கணவருக்கு கொடுத்தது மிகப்பெரிய கவுரவம். அடுத்ததாக காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி கடைசி வரைக்கும் நீங்கள் கூடவே இருந்திர்கள் ரொம்ப ரொம்ப நன்றி. ஊடகத்துறையில் உள்ள சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி. உலகமெங்கும் மற்றும் இவ்வளவு தூரம் என் கணவரோடு கடைசி வரைக்கும் வந்த கோடான கோடி ரசிகர்களுக்கும் நன்றி” என்று உருக்கமாக பேசியுள்ளார்