“முதலமைச்சருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.,” செந்தில் பாலாஜி உருக்கம்.!
என்மீது நம்பிக்கை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் என செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த ஜாமீன் உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, 2 பேரின் பிணை உத்தரவாதங்கள் அளித்ததை அடுத்து, புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் உத்தரவையடுத்து, தற்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார். அவரை திரளான திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். திமுக தொண்டர்களின் வெற்றி கோஷங்களுக்கு இடையே புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி.
அப்போது தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு செந்தில் பாலாஜி பேட்டியளித்தார். அதில், ” என் மீது நம்பிக்கைக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் வாழ்நாள் முழுவதும் நான் நன்றியுள்ளவனாய் இருப்பேன். மேலும் மாண்புமிகு அமைச்சர் உதயநிதிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்பட்ட வழக்கு. அதனை சட்டப்படி எதிர்கொண்டு நான் நிரபராதி என நிரூபித்து காட்டுவேன். இன்னும் சில தினங்களில் என் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவமனை செல்ல உள்ளேன். அதற்கு பிறகு விரிவாக பேசுகிறேன். ” என புழல் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.