தஞ்சாவூர் கல்லூரி மாணவ, மாணவிகள் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து போராட்டம்!
தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திரிபுராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில், ரஷ்ய புரட்சியாளர் லெனின் சிலையை பாரதிய ஜனதா கட்சியினர், ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.
இந்த சம்பவம் நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரான ஹெச். ராஜா, இதனை வரவேற்று, தமது முகநூலில் கருத்துக்களை பதிவு செய்தார். மேலும், தமிழகத்தில் பெரியார் சிலைகளையும் இடிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதனால், தேசிய அளவில் பதற்றம் உருவானது. ஹெச்.ராஜாவை கண்டித்து, தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஹெச்.ராஜாவை கண்டித்து, தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்ததோடு, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.