#Justnow:தொழில்துறையை தங்கமாக மாற்றிய ‘தங்கம் தென்னரசு’ – முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
சென்னை,நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும்,முதல்வர் மு.க.ஸ்டாலின் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.ரூ.22,252 கோடி மதிப்பில் 21 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.இதன் மூலம் 17,654 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில்,தொழில்துறையை தங்கமாக மாற்றிய அமைச்சர் ‘தங்கம் தென்னரசு’ என முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார்.இது தொடர்பாக,மாநாட்டில் உரையாடி வரும் முதல்வர் கூறியதாவது:
“திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டிலேயே தொழில் துறையில் மகத்தான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.அந்தவகையில்,தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில்,14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளது.தொழில்துறையை தங்கமாக மாற்றியுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.அமைச்சரவையில் அவருக்கு தொழிற்துறையை தேர்ந்தெடுத்தேன்.துணிச்சலாக செயல்படக் கூடிய அமைச்சர் தங்கம் தென்னரசுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்”,என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும்,பேசிய முதல்வர் கூறுகையில்:”தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவதே திராவிட மாடல் அரசின் இலக்கு.அந்த வகையில்,ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்திற்கு உயர்த்துவோம்.அதே சமயம்,தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்.குறிப்பாக,உலகின் மூலை முடுக்கெல்லாம் “மேட் இன் தமிழ்நாடு” பொருட்கள் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.இதனால்,திராவிட மாடல் மாநிலத்தை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுத்து வருகின்றனர்”,என்று தெரிவித்துள்ளார்.