மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார் தங்க தமிழ்செல்வன் .டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? என்றும் என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்றும் பேசினார்.இதற்கு தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன் இருவரும் மாறி மாறி கருத்து தெரிவித்தனர்.இதனால் அமமுக கட்சியினர் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது.
சமீபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்து கொண்டார். இதேபோல் செந்தில் பாலாஜியும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.இதனிடையில் தற்போது திமுகவில் இணைய அண்ணா அறிவாலயத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவரது 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
இதனிடையில் தங்கத்தமிழ்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,மு.க.ஸ்டாலின் தலைமையில் தேனியில் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.