தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நர்சிங் படிக்கும் வாய்ப்பு…!!!
திருநங்கை தமிழ் செல்வி கடந்த ஆண்டு தனது +2 படிப்பை முடித்தார். இவர் தொடர்ந்து டிப்ளமோ நர்சிங் படிக்க வேண்டும் என்பது இவரது ஆசை. ஆனால் இவர் மூன்றாம் பாலினத்தவர் என்பதால் அரசு மருத்துவ கல்லூரிகளில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்றாம் பாலினத்தவர்கள் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கல்வி பயில அரசு உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியும், இவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து அவர் நர்சிங் படிப்பதற்கு இடம் கொடுங்கள். இல்லையென்றால் கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள் என்று சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பியுள்ளார். இது குறித்த தகவல் பத்திரிகையில் வெளிவந்தது.
இதனை படித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், திருநங்கை தமிழ் செல்விக்கு நர்சிங் படிக்க அனுமதி வழங்க உத்தரவிட்டார். அதன் பிறகு இவருக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிப்பதற்கான சேர்க்கைக்கான அனுமதி சீட்டை பெற்று கொண்டார். இதனையடுத்து இவர் இந்த சேர்க்கை சீட்டை கொண்டு சென்று நீதிபதி துரை ஜெய்சந்திரனுக்கு நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் திருநங்கைக்கு நர்சிங் படிப்பதற்கான வாய்ப்பு அளித்து இருப்பது இதுதான் முதல் முறை.