தைப்பூச திருவிழா கோலாகலம்.., அறுபடை வீடுகளில் குவிந்து வரும் முருக பக்தர்கள்.!
இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பழனி கோயிலில் சுமார் 5மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பலதண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா மிகவும் புகழ்பெற்றது . அதுபோக, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நேற்று முதலே அதிகரிக்க தொடங்கிவிட்டது.
தைமாதம் வரும் பௌர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் ஒன்று கூடும் நாளில் தைப்பூசம் திருவிழா கொண்டாப்படுகிறது. அதுவும் இந்தாண்டு முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை வருவது கூடுதல் சிறப்பு என கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதியன்று பழனி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தைப்பூசம் தொடங்கியது.
நேற்று 6ஆம் நாளில் பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருமண வைபோகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று தைப்பூச முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற் உள்ளது. இன்று தைப்பூச திருநாளில் முருகப்பெருமானை தரிசிக்க முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அறுபடை வீடுகளில் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரை மேற்கொண்டும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் பக்தர்கள் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து தரிசிக்கும் அளவுக்கு கூட்டம் அலைமோதுகிறது.
பழனியில் பக்த்ர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அவர்கள் பாதுகாப்புக்காகவும் சுமார் 3 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பக்த்ர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் நேற்று முதல் 3 நாட்களுக்கு நாளை வரை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.