பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய தடா பெரியசாமி!
ADMK: தமிழ்நாடு பாஜக பட்டியலின அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாடு பாஜக பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரியசாமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதற்கு முன்பு தொல் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தடா பெரியசாமி, தற்போது அதிமுகவில் ஐக்கியமானார்.
மக்களவை தேர்தலில் சீட் வழங்காததால் அதிருப்தியில் இருந்ததாகவும், இதனால் தற்போது பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் தடா பெரியசாமி இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட தடா பெரியசாமி வாய்ப்பு கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி என்பவர் அறிவிக்கப்பட்டதால் தடா பெரியசாமி அதிருப்தியில் இருந்துள்ளார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு இரு கட்சிகளில் இருந்தும் மாறி மாறி கட்சி மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது தேர்தல் சமயத்தில் பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு மாறியுள்ளார் தடா பெரியசாமி.