#TETExam:9,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்;ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? – TRB முடிவு!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(TET) கடந்த 14-03-2022 முதல் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னதாக அறிவித்திருந்தது.அதன்படி,இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.அதே சமயம்,தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதனிடையே,சர்வர் கோளாறால் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனைத் தொடர்ந்து,ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில்,நடப்பு ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வானது வருகின்ற ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 9,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவுள்ளது.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில்,இரண்டு கட்டங்களாக தேர்வை நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,அரசுப் பள்ளிகள்,சிறுபான்மையினர் நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியது.குறிப்பாக,2013-ஆம் ஆண்டுக்கு முன் TRB மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்,மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.