தென்காசி: திமுக நகராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டை பெண் நகர்மன்ற தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அந்நகராட்சி ஆணையர் சுகந்தி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு, நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ராமலட்சுமி உள்ளார். இந்த சூழலில், கடந்த டிசம்பர் மாதம் திமுக நகர்மன்ற தலைவர் ராமலட்சுமிக்கு எதிராக திமுக, அதிமுக, பாஜக என 19 பேர் கையெழுத்திட்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதுதொடர்பான மனு செங்கோட்டை நகராட்சி ஆணையரிடமும் வழங்கப்பட்டது. அதன்படி, இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று செங்கோட்டை நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 24 கவுன்சிலர்களில், திமுகவை தவிர அதிமுக, பாஜகவை சேர்ந்த 13 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதனால், செங்கோட்டை நகர்மன்ற தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி பெற்றதாக ஆணையர் சுகந்தி அறிவித்துள்ளார்.
மாணவிக்கு பாலியல் தொல்லை – பள்ளி முதல்வர் கைது..!
போதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக தெரிவித்துள்ளார். இதனிடையே, கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது செங்கோட்டை நகராட்சியில் 2-வது வார்டில் ராமலட்சுமி என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த உள்ளாட்சி தேர்தலில் செங்கோட்டை நகராட்சியில் அதிமுக 10, திமுக 7, பாஜக 4, சுயேட்சை 2, காங்கிரஸ் 1 இடங்களில் வெற்றி பெற்றது.
இதனால், அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் ஆதரவுடன் செங்கோட்டை நகராட்சி தலைவியாக ராமலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, திடீரென முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் ராமலட்சுமி திமுகவில் இணைந்தார். இதனால், ராமலட்சுமிக்கும், சில கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது.
மேலும், அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து, நகராட்சி தலைவி ராமலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர். நகராட்சி தலைவிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம், வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை கமிஷனர் சுகந்தி தலைமையில் விவாதம், வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் நடந்தது.
ஆனால், போதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால் நகராட்சி பெண் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியால் செங்கோட்டை நகர்மன்ற தலைவி ராமலட்சுமியின் பதவி தப்பியது. இதுபோன்று சமீபத்தில் நெல்லை திமுக மேயருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானமும் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.