ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.
கடந்த 2018-ம் ஆண்டு திமுகவின் மூத்த ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை தமிழக முதல்வராகப் பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்களுக்கு வழங்கியதன் மூலம் சுமார் ரூ.4,800 கோடி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்திருந்தார்.
இதன்பின் ஆர்.எஸ்.பாரதியின் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
மேலும், இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், விரைவில் விசாரிக்க கோரி தமிழக அரசு தரப்பு மற்றும் லஞ்சஒழிப்புத்துறை முறையிட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சிபிஐ விசாரணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.