ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தற்காலிக விலக்கு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!
- பெருநகர சென்னை மாநகராட்சி ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 2021ம் ஆண்டிற்கான உயிர்வாழ் சான்று அளிப்பதிலிருந்து தற்காலிகமாக விலக்கு.
- உயிர்வாழ் சான்று அளிக்க ஓய்வூதியர்கள் அலுவலகம் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து பென்ஷன் வாங்கக் கூடிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் வழக்கமாக உயிர்வாழ் சான்றிதழ் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பார்கள்.
ஆனால், கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை காரணமாக ஓய்வூதியதாரர்களின் உடல்நலம் கருதி உயிர்வாழ் சான்றிதழை ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஒப்படைக்கலாம் என அரசு அறிவித்திருந்தது.
தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான உயிர்வாழ் சான்றிதழையும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு பதிலாக ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஒப்படைக்கலாம் என அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பெருநகர சென்னை மாநகராட்சி ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 2021ம் ஆண்டிற்கான உயிர்வாழ் சான்று அளிப்பதிலிருந்து தற்காலிகமாக விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே, உயிர்வாழ் சான்று அளிக்க ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் அலுவலகம் வர வேண்டாம் என அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.