கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் கோயில் திறப்பு – அமைச்சர் சேகர் பாபு
கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் தகவல்.
தமிழகத்தில் கொரோனா பரவலால் இம்மாதம் இறுதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 3 நாட்களில் பக்கதர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஒரு சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திரையரங்குகள் திறப்புக்கு மட்டுமே அனுமதி வழங்கிய அரசு, ஏன் கோயில்கள் திறப்புக்கு மட்டும் தடை விதித்துள்ளது என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி, எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக கோயில் திறக்கப்படும் என்றும் முதல் நடவடிக்கையாக முதல்வர் மு.க ஸ்டாலின் எடுப்பார் எனவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தான் வாரத்தில் 3 நாட்கள் கோயில்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், கோயில்களில் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சில கோவில்களுக்கு தமிழ், சமஸ்கிருத பெயர்கள் உள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, முதல்வர் அனுமதியுடன் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் கோவில்களின் பெயர்களை அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.