முழுநேர அரசியல்வாதி யார் என சொல்லுங்கள்.. நான் எதற்காக சினிமாவில் நடிக்கிறேன் என சொல்கிறேன் – கமல்
மக்கள் நீதி மய்யத்தின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கட்சியின் தொடக்க விழாவையொட்டி இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது கமல்ஹாசன் கூறியதாவது, மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். பணம் பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இல்லாமல் மக்களை சந்தித்து கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளை பெற்றோம். மக்கள் நீதி மய்யத்தை போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. சாதி, மத சழக்குகள் இருக்கும் வரை, வடக்கு, தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது, உயர்த்திய கொடிகள் தாழாது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மேயர் பிரியா!
நான் அரசியலுக்கு கோபத்தில் வரவில்லை, சோகத்தில் வந்துள்ளேன். இத்தனை வருடங்களாக எனக்கு வீடு, கார் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மக்கள் கொடுத்துள்ளார்கள். இதைவிட்டு நான் எதற்கு அரசியலுக்கு வரவேண்டும். உங்களின் அன்புக்கு கைமாறும் செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். என்னுடைய கடமை முடிந்தது என்று அப்படியே போக முடியாது. மக்கள் கொடுத்த அன்பு அப்படியே பாக்கி உள்ளது.
அதனை திருப்பி கொடுக்கத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால், என்னை அரசியலை விட்டு போக வைப்பது ரொம்ப கஷ்டம். என்னுடைய சொந்த பணத்தில் தான் கட்சி நடத்துகிறேன் என்றார். மேலும், முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை. முழுநேர அரசியல்வாதி யார் என்பதை எனக்கு சொல்லுங்கள், நான் எதற்காக சினிமாவில் நடிக்கிறேன் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன்.
முழு நேர குடிமகன்களாக நீங்கள் இருக்கிறீர்களா? என கேட்டு, ஏன் முழு நேர அரசியலுக்கு வரவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்தார். தொடர்ந்து கமல் கூறியதாவது, கோவையில் தோல்வியடைய காரணம் 90 ஆயிரம் பேர் ஓட்டு போடாதது தான். இன்னும் சொல்லப் போனால் இந்தியாவிலேயே 40% ஓட்டு போடுவதில்லை, அவர்கள் அனைவரும் வாக்கு செலுத்தினாலே எல்லாம் சரியாகிவிடும். ஓட்டு போடாதவர்கள் முழுநேர குடிமகன்கள் இல்லை.
எனவே, அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஜனநாயக தேரை அனைவருமே சேர்ந்துதான் இழுக்க வேண்டும் என்ற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடாகும். மக்களின் கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்கு தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியம் என தெரிவித்தார்.