பற்களை பிடுங்கிய விவகாரம்: காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லை பிடுங்கி மிக கொடூரமாக துன்புறுத்தியதாக கடந்தாண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இது தொடர்பாக பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சிபிசிஐடி போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலத்திற்கு, திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், சேரன்மகாதேவி துணை ஆட்சியர், கடந்த மார்ச் மாதம் தனது விசாரணையை தொடங்கினார்.
புதுச்சேரியில் பரபரப்பு! திடீரென சரிந்து விழுந்த 3 அடுக்குமாடி கட்டிடம்!
அதனைத் தொடர்ந்து பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து கடந்தாண்டு மார்ச் 29ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். ஏப்ரல் மூன்றாம் தேதி துணை ஆட்சியரின் இடைக்கால விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் பல்வீர் சிங்கின் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. 10 மாதங்களாக பல்வீர் சிங் இடைநீக்கத்தில் உள்ள நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பிற்கேற்ப பல்வீர் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.