பிரான்ஸ் நாட்டு கல்விமுறை பற்றி தெரியுமா.? சுற்றுலா முடித்த கனவு ஆசிரியர்கள் உற்சாக பேட்டி.!
கனவு ஆசிரியர் விருது வென்று பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்று வந்த ஆசிரியர்கள் இன்று சென்னை திரும்பினர். அவர்கள் அந்நாட்டு கல்வி முறை பற்றி செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
சென்னை : தமிழ்நாடு முழுதுவதும் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை கனவு ஆசிரியர்களாக தேர்வு செய்து அவர்களை பிரான்ஸ் நாட்டிற்கு இன்ப சுற்றுலா அழைத்து சென்றது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை. இதனை கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அறிவித்து இருந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். பள்ளிக்கல்வித்துறை செயல்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் , பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த கனவு ஆசிரியர்கள் 55 பேரும் இன்று தாயகம் திரும்பினர். அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், பிரான்ஸ் நாட்டின் மாணவர்கள் கல்வி முறை பற்றி விரிவாக கூறினர்.
அதில்,”பிரான்ஸ் நாட்டில் 1 முதல் 6ஆம் வகுப்பு வரையில் தொடக்கநிலை கல்வி என்றும் , 7 முதல் 10 வரையில் நடுநிலை கல்வி முறை என்றும் அடுத்து கல்லூரி ,அதற்கடுத்து யுனிவர்சிட்டி என்றும் கல்விமுறை உள்ளது. இதில் கல்லூரிக்கு முன்னர் வரையில் அரசாங்கமே மாணவர்களின் கல்வி செலவை முழுதாக ஏற்கும்.
தொடக்க கல்வி நிலையங்கள் வீட்டருகே இருக்கும், அடுத்தது கல்லூரிகள் 2,3 ஊர்களுக்கு ஒன்று இருக்கும், யுனிவர்சிட்டி என்பது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இருக்கும். தொடக்க கல்வியில் ஒரு வகுப்பில் அதிகபட்சம் 30 மாணவர்கள் மட்டுமே இருப்பர். மாணவர்களுக்கு அரசு இலவசமாக புத்தகங்களை வழங்கும். அதனை மாணவர்கள் பயன்படுத்திவிட்டு அப்படியே பத்திரமாக கல்வி நிறுவனங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். அந்த வயதிலேயே மாணவர்களுக்கு பொறுப்பு கடமை கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதனை நமது மாணவர்களிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும்.
கல்லூரி, யுனிவர்சிட்டி சேர வேண்டும் என்றால் மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத வேண்டும். அதில் பாஸ் செய்தால் மட்டுமே கல்லூரியில் இடம் கிடைக்கும். பள்ளி பருவத்தில் ஒவ்வொரு இடைப்பட்ட காலத்திலும் பருவ தேர்வு நடைபெற்று இறுதியில் மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும்.
அந்த ஊரில் மருத்துவம் பயில வேண்டும் என்றால் 10 வருடங்கள் படிக்க வேண்டும். ஆனால், நமது ஊரில் 6 ஆண்டுகளில் மருத்துவம் படித்து முடித்துவிடலாம். அந்த வகையில் நமது மருத்துவ படிப்பு சிறப்பு வாய்ந்தது. பிரான்ஸ் நாட்டிற்கு சென்றதன் மூலம் அந்நாட்டு பண்பாடு , கலாச்சாரம் கல்விமுறை , கட்டடக்கலை என பலவற்றை அறிந்து கொண்டோம். இதனை மாணவர்களுக்கு கொண்டு செல்வதே எங்கள் பொறுப்பு. ” என்று கனவு ஆசிரியர் விருது வென்று பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட திண்டுக்கல்லை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
மேலும் ஒரு ஆசிரியர் கூறுகையில், “இந்தப்பயணம் எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. கல்வி , கலாச்சாரம், பண்பாடு, மின்சார சிக்கனம் என பல்வேறு விஷயங்கள் குறித்து அறிந்து கொண்டோம். அதனை கிராமப்புற மாணவர்கள் வரையில் அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த முதலமைச்சர் , துணை முதலமைச்சர், பள்ளிகல்வித்துறை அமைச்சருக்கு நன்றி” என்று தெரிவித்தார்.