ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களின் சான்றிதழ் காலத்தை நீடிக்க வேண்டும் – திருநாவுக்கரசு!
பேராசிரியர்களுக்கான மத்திய, மாநில தகுதித் தேர்வுகள் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆயுள் கால சான்றிதழ்களாக வழங்கப்படுகின்றது. பீகார், ஹரியானா போன்ற மாநில அரசுகள் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு சான்றிதழ்களின் காலத்தை ஏற்கெனவே நீட்டித்துள்ளன. அதுபோல் தமிழக அரசும் ஆயுள் கால சான்றிதழ்களாக தகுதி பெற்றவர்களின் சான்றிதழ் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும். சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பணி கிடைக்காமல் அவதியுறும் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சான்றிதழின் காலத்தை நீட்டித்துத் தந்தால் தான் வருங்காலத்திலாவது அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும்.
இல்லையெனில் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக அமையும். நீண்டகாலமாக பணி நியமனம் கிடைக்காமல் உள்ள பயிற்சி பெற்றவர்களின் அவலம் நீங்கவும், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை முறைப்படுத்தி சரி செய்யவும், 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு விடப்பட்டுள்ள மேற்கண்ட வேண்டுகோளை ஏற்று செயல்படுத்த தமிழக கல்வி அமைச்சரும், தமிழக முதல்வரும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.