“ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர்;நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும்”- பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்!

Default Image

பாலியல் குற்றங்களை தடுக்காமலும், உடந்தையாகவும் இருந்த பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து,அவர் அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில்,அவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து,மாணவியின் பெற்றோர் உக்கடம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு,  கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது தான் மாணவிக்கு பாலியல் தொல்லை இருந்து வந்தது தெரிய வந்தது.

ஏற்கனவே படித்த சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே மாணவி வீட்டில் சொல்லி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த விசயம் வெளியே தெரிந்தால் பள்ளி பெயர் கெட்டுவிடும் என்பதால், அப்படியே மூடி மறைத்து விட்டதாகவும், எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோரும் உறவினரும் குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து,சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ என 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதறகிடையில்,மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சக மாணவர்களும்,மாதர் சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,தாய், தந்தைக்குப் பிறகு மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும்,இது ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“கோவை உக்கடம் பகுதியில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்று நமது முன்னோர் கூறியுள்ளனர். தாய், தந்தைக்குப் பிறகு மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர்.

மாணவி தற்கொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது போதுமானதல்ல. அவரின் பாலியல் குற்றங்களை தடுக்காமலும், உடந்தையாகவும் இருந்த பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும்”,என்று வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்