மார்ச் முதல் டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் – டாஸ்மாக் நிர்வாகம்!
கூடுதல் விலையை தடுக்க, மதுபான விற்பனை வரும் மார்ச் முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூஆர் கோடு முறையில் விற்பனை நடைமுறைக்கு வருகிறது.
அதாவது, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால், கடையின் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கடந்த 2024 ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
தற்பொழுது, அந்த மனு விசரணைக்கு வந்த நிலையில், மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க புதிய முறை கடைபிடிக்கப்படும். மதுபான விற்பனை டிஜிட்டல் மயமாக்கப்படும். கூடுதல் விலை விற்பனையை தடுக்க கியூ ஆர் கோட் முறை அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதை தொடர்ந்து அந்த சுற்றறிக்கையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம், “டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதற்கான முகாந்திரம் இருந்தால் மட்டுமே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.